Saturday, February 27, 2010

பில்லி சூனியம் செய்வினை

ஆன்மீக சிந்தனையுள்ளவர்களுக்கு மத்தியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நம்பிக்கைகளில் ஒன்று சூனியமாகும். இந்த நம்பிக்கை வேரூன்றிய இடங்களில் அதன் பாதிப்புகள் குறித்த பேச்சும் பிரச்சாரமும் அதிகமாகவே இருக்கும். ஆன்மீக வாதிகள் சூனியத்தை நம்புகிறார்கள் என்ற பொதுவான கருத்திலிருந்து முஸ்லிம்களும் விடுபட வில்லை. இந்த நம்பிக்கை முஸ்லிம்களிடம் நிலைப் பெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சூனியம் பற்றி பேசும் குர்ஆன் வசனங்களும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டு அதன் காரணத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று வரும் ஹதீஸ்களும் அவற்றில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. 'இறைத்தூதருக்கே சூனியம் செய்யப்பட்டு அதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்' என்று தமது சூனிய நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ளும் முஸ்லிம்களைப் பார்க்கிறோம். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாத்தியமா.. என்ற சாதாரண சிந்தனைக்கூட இவர்களிடம் எட்டுவதில்லை.
இறை நம்பிக்கையில் ஏற்படும் இடற்பாடுகளை இனங்காட்டி மக்களை மீட்டெடுக்க வந்த நபிமார்களின் பெயரிலேயே இறை நம்பிக்கையில் ஊருவிளைவிக்கும் காரியம்தான் இந்த சூனிய நம்பிக்கையின் மூலம் நடைப்பெறுகிறது. அப்படியானால் சூனியம் பற்றி இஸ்லாம் என்னதான் சொல்கிறது என்ற கேள்வி வருகிறது. இனி அது குறித்து விளங்குவோம்.
'சூனியம் என்று எதுவுமே இல்லை' என்று இஸ்லாம் மறுக்கவில்லை. சூனியம் இருப்பதாக இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. குர்ஆனில் அது பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்கள் விளங்கி வைத்துள்ளது போன்ற சூனியத்தை இஸ்லாம் சொல்லவில்லை.
சூனியத்தின் மூலம் எவருக்கும் எத்தகைய கெடுதியையும் செய்துவிடலாம், எவரை வேண்டுமானாலும் அழித்து விடலாம், கை, கால்களை முடக்கி விடலாம், சம்மந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவர் வயிற்றில் மருந்தை செலுத்தி விடலாம், கருவில் வளரும் குழந்தையை கொன்று விடலாம், கர்ப்பத்தை கலைத்து விடலாம், நோய் பிடிக்க செய்து விடலாம்... இப்படியே ஏராளமான கெடுதிகளை சூனியத்தின் மூலம் செய்து விட முடியும் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். இத்தகைய நம்பிக்கைகளுக்கு துளி கூட குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ ஆதாரம் இல்லை.
நல்ல உள்ளங்களுக்கு மத்தியில் தேவையில்லாத சந்தேகங்களை ஊட்டி பிரச்சனைகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்த முடியும் என்பது தான் சூனியத்தின் அதிகபட்ச வேலை என்று குர்ஆன் கூறுகிறது.
'கணவன் - மனைவிக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும் சூனியத்தை அவர்கள் கற்றுக் கொண்டார்கள்' என்று சூனியம் பற்றிப் பேசும் (2:102) வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான்.
இந்த சூனியம் பேச்சுக்களின் காரணமாக உருவாவதாகும். ஒற்றுமையாக வாழும் கணவன் மனைவிக்கு மத்தியில் சண்டை சச்சரவை ஏற்படுத்த அந்த கணவன் மனைவியை சுற்றியுள்ளவர்கள் மனங்களில் ஷைத்தான் இவர்கள் பற்றிய தீய எண்ணங்களை ஏற்படுத்துவான். இதன் கெடுதியை உணராதவர்கள் தங்கள் மனங்களில் ஷைத்தானால் ஏற்படுத்தப்பட்ட தீய எண்ணங்களை தங்கள் வாய்களால் வெளிப்படுத்துவார்கள். விளைவு குடும்பங்களுக்கு மத்தியில் பெரும் பிரச்சனை வெடித்து கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை தலைத்தூக்கும். ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகம் வந்து விட்டால் அவர்கள் செய்யும் சாதாரண சின்ன தவறுகள் கூட பூதகரமாக தெரியும். யாரால் இத்தகைய பேச்சும் பிரச்சனையும் உருவாகியது என்று சிந்திக்க விடாத அளவுக்கு ஷைத்தான்களின் திட்டம் வலுவாக இருக்கும். இதை உணராத அந்த கணவனோ அல்லது மனைவியோ தங்களுக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தர்கா, மந்திரவாதி, சூனியக்காரன், சாமியார் என்று அலையும் சூழ்நிலை உருவாகி விடுகிறது. இந்த சந்தர்பங்களில் இறைவனைப் பற்றிய நினைவும் நம்பிக்கையும் குறைந்துப் போய் அவனுக்கு எதிரான அவன் தடுத்துள்ள எல்லாக் காரியங்களையும் செய்யும் நிலை உருவாகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதுதான் சூனியத்தின் வேலையாகும்.
பேச்சுக்களால் ஏற்படும் சூனியத்தில் கணவன் - மனைவிக்கு மத்தியில் பிரிவினை உருவாகும் என்பதற்கு நபி (ஸல்) வரலாற்றில் கூட மறுக்க முடியாத சான்று கிடைக்கின்றது.
நபி(ஸல்) அவர்களுடன் ஆய்ஷா(ரலி) ஒரு போருக்குப் போய்விட்டு திரும்பி வரும் வழியில் ஒரு இடத்தில் நபி(ஸல்) ஓய்வெடுக்கிறார்கள். இந்த சந்தர்பத்தில் அன்னை ஆய்ஷா அவர்கள் தம் சுய தேவைக்காக கொஞ்ச தூரம் சென்று விடுகிறார்கள். தம் மனைவி சுய தேவைக்கு சென்றுள்ளதை நபியவர்கள் அறியவில்லை. ஒட்டகத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கூண்டில் ஆய்ஷா இருப்பதாக நினைத்துக் கொண்டு சிறிது நேர ஓய்விற்குப் பின் நபியவர்கள் புறப்பட்டு விடுகிறார்கள். நடந்த எது ஒன்றும் தெரியாமல் தன் தேவைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்த ஆய்ஷா(ரலி)க்கு அதிர்ச்சி. அந்த இடத்தில் யாருமே இல்லை. சென்றவர்கள் தம்மைக் காணாமல் மீண்டும் இங்கு வந்து தன்னை அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு ஆய்ஷா(ரலி) அதே இடத்தில் உட்கார்ந்து பிறகு தூங்கி விடுகிறார்கள். போரின் முடிவில் முஸ்லிம் வீரர்கள் கவனிக்காமல் விட்டு வந்த பொருள்களை சேகரித்து வருவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு நபித் தோழர் கடைசியாக அந்த வழியாக வரும்போது கருப்புத் துணியால் தன்னை மூடிக் கொண்டு தூங்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அது அன்னை ஆய்ஷா அவர்கள் தான் என்பதை அறிந்து 'சுப்ஹானல்லாஹ்' என்கிறார். இந்த சப்தத்தில் ஆய்ஷா(ரலி) விழித்துக் கொள்கிறார்கள். அந்த நபித் தோழர் தனது வாகனத்தை படுக்க வைத்து அதில் ஆய்ஷா அவர்களை ஏற சொல்லி விட்டு இவர் வாகனத்தைப் பிடித்துக் கொண்டு ஊர் வந்து சேருகிறார். வேறொரு ஆணுடன் ஆய்ஷா(ரலி) வருவதைக் கண்ட நயவஞ்சகர்கள் சிலர் ஆய்ஷா(ரலி) அவர்களையும் அந்த நபித் தோழரையும் தொடர்புப் படுத்தி பேசத்துவங்கி விடுகிறார்கள். பேச்சுக்களால் பரவும் இந்த சூனியத் திட்டம் வேலை செய்ய துவங்கி நபி(ஸல்) அவர்களின் மனதில் பெரும் குழப்பத்தை - சஞ்சலத்தை - ஏற்படுத்தி, நிம்மதியை கெடுத்து குடும்பத்தில் பெரும் புயலை உருவாக்கி விடுகிறது.
'ஆய்ஷாவே! நீ தவறு செய்திருந்தால் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேள்' என்று தனது அன்பு மனைவியிடம் கூறக்கூடிய அளவுக்கு, 'ஆய்ஷாவிற்கு தலாக் கொடுத்து விடலாமா' என்று பிறரிடம் ஆலோசனை செய்யும் அளவுக்கு அந்த சூனிய பேச்சின் தாக்கம் வலுவாக இருந்தது. 'சூனியத்தின் மூலம் கணவன்- மனைவிக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவார்கள்' என்ற இறைவனின் கூற்றை கண்ணெதிரே தெரிந்துக் கொள்ளும் படியாக அந்த சம்பவம் நாற்பது நாட்கள் வரை நபியையும் நபியுடைய மனைவியையும் பாதித்தது. அழுவதும் அந்த அசதியால் தூங்குவதும் விழித்தவுடன் மீண்டும் அழுவதுமாகவே ஆய்ஷா(ரலி)யின் பொழுதுகள் கழிந்துக் கொண்டிருந்தன. இந்த சூனியப் பேச்சுக்கு எதிராக ஆய்ஷா(ரலி) அவர்களின் தூய்மையைப் பற்றி இறைவன் வசனங்களை இறக்கி வைக்கிறான்.
'இப்பழியை உங்கள் நாவுகளால் எடுத்து சொல்லிக் கொண்டு, உங்களுக்கு அறிவில்லாத ஒன்றை உங்கள் வாய்களால் கூறித் திரிகிறீர்கள். (கணவன் மனைவியை பிரிக்கும் இந்த சூனியப் பேச்சை) நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரியதாக இருக்கிறது.' (அல் குர்ஆன் 24:15) இந்த வசனம் உட்பட இதற்கு முன்னும் பின்னும் உள்ள சில வசனங்கள் இறங்கிய பிறகே நபியின் வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் தென்படத் துவங்கின. (இந்த சம்பவம் புகாரியில் மிக விரிவாக பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.)
மனித மனங்களை பாழ்படுத்த ஷைத்தான்களிடம் ஏராளமான திட்டங்கள் இருப்பதால்தான் தெளிவான ஆதாரமில்லாத, சந்தேகமான எந்த ஒரு செய்திக்கும், காரியத்துக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று இறைவன் வழிக் காட்டியுள்ளான்.
'இறை விசுவாசிகளே! (சந்தேகமான) எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் எண்ணங்களில் சிலது பாவமாக அமைந்துவிடும். (அல் குர்ஆன் 49:12)
இறைவனைப் பற்றிய அச்சமில்லாத எவரும் இத்தகைய சூனியத்தை செய்துவிட முடியும். இன்றைக்கு பரவலாக அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. கணவன் மனைவியை பிரிக்கும் திட்டத்தில் இறங்கும் எவரும் சூனியக்காரர்கள் என்ற வட்டத்துக்குள் வந்து விடுவார்கள். அவர்கள் குடும்பத்தாராக இருந்தாலும் சரி, வெளி மனிதர்களாக இருந்தாலும் சரி! இவர்களைப் போன்றவர்களின் பேச்சுக்களையெல்லாம் சுட்டிக் காட்டும் விதமாகவே,
'பேச்சுக்கலையில் சூனியம் இருக்கிறது' என்று நபி(ஸல்) கூறியுள்ளர்கள். (உமர்(ரலி) அறிவிக்கும் இச் செய்தி புகாரியில் (5325) இடம் பெற்றுள்ளது)
பேச்சுக்கலையால் மனங்களை பாழ்படுத்தும் சூனியம் போன்றே கண்களுக்கு கொடுக்கும் தீவிர பயிற்சியாலும் மனித மனங்களில் பயங்களை உருவாக்கி சூனியம் செய்து விடலாம். இத்தகைய சூனியம் ஃபிர்அவ்ன் என்ற கொடியவன் வாழ்ந்த காலத்தில் பிரபல்யமாக இருந்தது.
இறைத்தூதர் மூஸா(அலை) ஃபிர்அவ்னிடம் ஏகத்துவ பிரச்சாரம் செய்யும் போது மூஸா(அலை) அவர்களை தோற்கடிக்க சூனியக்காரர்களை ஃபிர்அவ்ன் துணைக்கு அழைக்கிறான். இதைக் குர்ஆன் வரிசையாக சொல்கிறது.
பிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். ''நாங்கள் மூஸாவை வென்று விட்டால் அதற்குறிய வெகுமதி எங்களுக்கு கிடைக்குமா..'' என்றார்கள். அவன் கூறினான், ''ஆம் நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்'' என்று.
'' மூஸாவே நீர் முதலில் எறிகிறீரா.. நாங்கள் எறியட்டுமா..'' என்றுக் கேட்டார்கள். அதற்கு மூஸா ''நீங்கள் எறியுங்கள்'' என்றார். அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள். மக்களின் கண்களை மருட்டி திடுக்கிடும் படியான திறமையான சூனியத்தை அவர்கள் செய்தனர். (அல் குர்ஆன் 7:113-116)
அவர்கள் தங்கள் கயிறுகளையும், கைத்தடிகளையும் எறிந்தபோது சூனியத்தால் நெளிந்தோடுவது போல் மூஸாவிற்கு தோன்றியது. அப்போது மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.
(மூஸாவே) பயப்படாதீர், நிச்சயமாக நீர்தான் மேலோங்குவீர்! என்று (இறைவன்) நாம் சொன்னோம். (அல் குர்ஆன் 20:66-68)
உம் கையில் இருப்பதை கீழே எறியும். அது அவர்கள் செய்தவற்றை விழுங்கி விடும். அவர்கள் செய்தது சூழ்ச்சியே ஆகும். ஆகவே சூனியக்காரர்கள் எங்கு சென்றாலும் வெற்றிப் பெற மாட்டார்கள் என்று கூறினோம்.
மூஸா எறிந்த உடன் சூனியக்காரர்கள் கற்பனை செய்த யாவற்றையும் அது விழுங்கி விட்டது. (அல் குர்ஆன் 7:117, 20:69)
சூனியக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டு, அங்கேயே சிறுமைப் படுத்தப்பட்டவுடன் உண்மையை விளங்கிக் கொண்டு உடனடியாக இஸ்லாத்தை ஏற்கிறார்கள். (அல் குர்ஆன் 7:119-121)
இந்த வசனங்களிலிருந்து பேசப்படும் சூனியம் அல்லாமல் செய்யப்படும் சூனியத்தின் நிலை என்னவென்று தெளிவாகிறது.
மனிதர்களிடம் ஏராளமான திறமைகள் பொதிந்துக் கிடக்கின்றன. அவற்றை வெளியில் கொண்டு வர முறையான தீவிர பயிற்சித் தேவைப்படும். அத்தகைய பயிற்சியின் மூலம் பெறப்படும் ஒரு கலையே மெஸ்மெரிஸம் என்ற கண்கலையாகும். இந்த கலையை பயிற்சியின் மூலம் பெற்றவர்கள் தங்கள் கண்களால் சில காரியங்களை தற்காலிகமாக செய்துக் காட்ட முடியும். இத்தகைய பயிற்சிப் பெற்றவர்கள் தான் மூஸா(அலை) காலத்தில் சூனியக்காரர்கள் என்ற பெயரில் இருந்துள்ளனர். அவர்களின் சூனியக்கலையைப் பற்றி இறைவன் கூறியுள்ள வார்த்தை ஊன்றி கவனிக்கத் தக்கதாகும். 'மக்களின் கண்களை மருட்டி திடுக்கிடும் படி செய்தனர்' என்கிறான். எதுவுமே இல்லாத போது கூட இருட்டில் நான் அதைப்பார்த்தேன், இதைப்பார்த்தேன் என்று பயந்த மக்கள் கூறுவது போன்ற ஒரு மாய தோற்றத்தை தான் அந்த சூனியக்காரர்கள் உருவாக்கிக் காட்டியுள்ளனர்.
இயற்கைக்கு மாற்றமாக நடக்கும் எது ஒன்றும் மக்களிடம் பயத்தையோ அல்லது ஆச்சரியத்தையோ உருவாக்கும். மூஸா உட்பட அங்கு குழுமி இருந்த மக்களுக்கு பயத்தை உருவாக்கும் நோக்கில் தான் அவர்கள் தங்கள் கண் கட்டி வித்தையை அரங்கேற்றினார்கள். இறைவனின் நாட்டப்படி மூஸா(அலை) வென்றவுடன், 'சூனியக் காரர்களின் கற்பனை தோற்கடிக்கப்பட்டது என்கிறான் இறைவன்' சூனியம் என்பது உண்மை என்றால் அதை கற்பனை என்று இறைவன் கூற மாட்டான். இறைவன் கற்பனை என்று கூறியதிலிருந்தே அவர்கள் செய்தது மெஸ்மெரிஸம் - கண்கட்டி வித்தைதான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாகிறது.
தங்கள் சூனியம் தோல்வியடைந்தவுடன் இனி இந்த பொய் மக்களிடம் எடுபடாது என்பதை அவர்கள் உணர்ந்ததோடு மூஸாவின் செயலும் அவரது அழைப்பும் சத்தியமானது என்று அவர்களின் அறிவு அவர்களுக்கு சொல்லி விடுகிறது. அதனால்தான் கொஞ்சமும் தயக்கமில்லாமல் அவர்களால் இஸ்லாத்தை ஏற்க முடிந்தது. ஃபிர்அவ்னின் மிரட்டலுக்கு அஞ்சாமல் உயிர்விட முடிந்தது.
சூனியக்கலை உண்மைதான் என்று அந்த சூனியக்காரர்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தால் மூஸாவிடம் தோற்றாலும் பிறரிடம் அதை செய்துகாட்டி வாழ்ந்திருக்க முடியும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்தே அது ஒரு போலித்தனமான தற்காலிகமான கலை என்பதை விளங்கலாம்.
இன்றைக்கும் கூட ஆங்காங்கே மணலை கயிறாக திரிப்பது, தண்ணீரை பாலாக்குவது, மண்ணிலிருந்து குங்குமம் வரவழைப்பது போன்ற வேடிக்கைகள் நடப்பதை பார்க்கிறோம். பயிற்சியின் வழியாகவும், செட்டப் மூலமாகவும் இவை நடத்தப்படுகின்றன.
சூனியத்தால் எதையும் செய்துக் காட்டிவிட முடியும் என்று கூறும் இந்த சூனியக் காரர்கள் தங்களுக்கு தேவையானதையே சூனியத்தால் செய்துக் கொள்ள முடியாமல் சூனியத்தை விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறார்கள். இதையெல்லாம் சிந்திக்கும் போது சூனியம் என்பது கண்களை உருட்டி மிரட்டி பயமுறுத்தும் ஒரு போலியான கலை என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இந்த சூனியத்தை விட நாம் மேலே விளக்கியுள்ள பேச்சு வழி சூனியம்தான் அபாயகரமானதும் அதிகமதிகம் இறைவனிடம் பாதுகாப்பு தேடக் கூடியதுமாகும். இந்த இரண்டு வகை சூனியத்தை தாண்டி வேறு சூனியம் எதுவுமில்லை. இருப்பதாக நம்புவது குர்ஆனையும் நபிவழியையும் ஏற்றுக் கொண்ட முஸ்லிமுக்கு அழகல்ல.
சந்தேகமும், பலவீனமும் உள்ளவர்களிடம்தான் இத்தகைய சூனியங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அர்த்தம் பொதிந்த இரண்டு பாதுகாப்பு சூராக்களை இறைவன் இறக்கி வைத்துள்ளான்.
'குல் அவூது பிரப்பில் ஃபலக்' 'குல் அவூது பிரப்பின்னாஸ்' இவற்றின் அர்த்தத்தை படித்து விளங்கும் எவரும் சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.
'இறைவனின் நாட்டமின்றி இதன் மூலம் அவர்கள் யாருக்கும் எத்தகைய தீங்கும் செய்து விட முடியாது. (அல் குர்ஆன் 2;102)

நன்றி
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

No comments:

Post a Comment