Saturday, February 27, 2010

வலிமார்கள் நமக்கு வக்கீல்களா?

அவ்லியாக்கள் பெயரால் நடைபெறும் அநாச்சாரங்கள் மார்க்கத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்ந்து ஒதுக்கித் தள்ளிய உத்தமர்களிலும் கூடச் சிலர், தர்காக்களுக்குச் செல்வதையும், வலிமார்கள் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதையும், நியாயம் என்று நினைக்கின்றனர்.
தமது தேவைகளை அவ்லியாக்கள் மூலம் கேட்பதற்குச் சில உதாரணங்களை ஆதாரங்களாக அள்ளி வீசுவார்கள்.முதலமைச்சரை நாம் நேரடியாகச் சந்திக்க முடியுமா? நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினரை முதலில் சந்திக்க வேண்டும். அவர் நம்மை அழைத்துச் சென்று முதலமைச்சரிடம் அறிமுகப் படுத்தி வைப்பார். அதன் பிறகுதான் முதலமைச்சரிடம் நமது தேவையைக் கேட்க முடியும். இதே உதாரணம், முதலமைச்சருக்குப் பதிலாக மன்னர், பிரதமர், கலெக்டர், என்று இடத்துக்குத் தக்கபடி மாறுவது உண்டு.
நீதி மன்றத்தில் நீதிபதியிடம் நாமே சென்று வாதாட முடியுமா? நமக்காக வாதாட திறமையுள்ள ஒரு வக்கீல் தேவையல்லவா? இது போல் தான் வலிமார்கள் நமக்கு வக்கீல்களைப் போன்றவர்கள்.இப்படி இன்னும் இதுபோன்ற ஏராளமான உதாரணங்களைச் சொல்வார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் போது இவை அனைத்தும் நியாயமாகத் தான் தோன்றும்.
முதலமைச்சரையோ, பிரதமரையோ, நாம் நேரடியாகச் சந்திக்க முடியாது என்பதும், இடையில் சபாரிசுக்கு ஒருவர் அவசியம் என்பதும் உண்மை தான். ஏனென்றால் முதலமைச்சருக்கோ பிரதமருக்கோ நாம் யார் என்பது தெரியாது. எனவே நமக்கு அறிமுகமான ஒருவர் நம்மை அறிமுகப் படுத்தி வைப்பது முக்கியம்.
ஆனால் அல்லாஹ், அப்படிப்பட்ட பலகீனம் உடையவன் அல்லவே! நாம் யார் என்பதும், நமது செயல்கள் எப்படிப் பட்டவை என்பதும் நம்மைப் படைத்து பாதுகாத்து வரும் அல்லாஹ்வுக்குத் தெரியாதா? (நவூது பில்லாஹ்)நாம் செய்கின்ற செயல்களை மட்டுமல்ல, நமது உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களைக் கூட அவன் அறிபவன் ஆயிற்றே!
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்.அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கின்றோம். (அல் குர்ஆன் 50: 16)
என்று திருமறை குர்ஆன் பறை சாற்றுகிறது.
நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகின்ற போது 'நடந்தது என்ன' என்பது பற்றி நீதிபதிக்கு எதுவும் தெரியாது. வக்கீல்களின் வாதத்தின் அடிப்படையில்தான் நீதிபதி தீர்ப்பு வழங்குவார்.செய்த குற்றத்தை மறைத்து - குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவும் வக்கீல்களால் முடியும். செய்யாத குற்றத்தைச் செய்ததாகப் போலி ஆதாரங்களுடன் நிரூபிக்கவும் வக்கீல்களால் முடியும். அப்படியானால் நாம் செய்து விட்ட தவறான செயல்களுக்காகவும் வக்கீல்களாகிய அவ்லியாக்கள் இறைவனிடம் வாதாடுவார்களா? வக்கீல்கள் என்று இவர்கள் கருதும் அவ்லியாக்களின் வாதத்தைக் கேட்டுத்தான் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவானா? அல்லாஹ்வுக்கு எதுவும் தெரியாதா? (நவூது பில்லாஹ்) உதாரணங்களைச் சொல்லும் கேடு கெட்டவர்களின் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருக்கின்றதா? அல்லாஹ்வின் தனித்தன்மைக்கே இந்த உதாரணங்கள் களங்கத்தை எற்படுத்து கின்றனவே இதையெல்லாம் கொஞ்சமும் சிந்திக்க மாட்டார்களா?
அவனுக்கு நிகராக யாருமே இல்லை (அல் குர்ஆன் 112; :5) என்று குர்ஆன் கூறுகின்றது.
ஒவ்வாருவரும் தமக்கு விருப்பமான அவ்லியாக்கள் தமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதோ குர்ஆன் கூறகிறது.
சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.(74 :48) எவர்கள் பரிந்து பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்களோ அவர்களையே அங்கு காண முடியாது.....எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ உங்களுக்குப் பரிந்துப் பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் உங்களுடன் இருப்பதை நாம் காணவில்லை. உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது.உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன.(என்று கூறுவான்.) அல் குர்ஆன் (6:94)
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து

No comments:

Post a Comment